Thursday, October 28, 2010
ATM-ல் தமிழைத் தொடுவோம்!.jaffnanet.blogspot.com
நாம் கோவிலுக்கு தினமும் போகிறோமோ இல்லையோ, ஏ.டி.எம்முக்கு அடிக்கடி போவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறோம். நாலைந்து பேர் வரிசையில் இருந்தால் முடிந்தவரை என் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு அடுத்த ஆளுக்கு வழி விடுவதிலேயே கவனம் இருக்கும். இதனாலேயே பலமுறை திரையில் தமிழ் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே வேலையை முடித்துவிடுவேன்.
தற்செயலாக இதைப்பற்றி ஒரு கருத்து என் மனதில் வந்தது. தமிழ் எனது தாய்மொழியாக இருந்தும் ஏன் நான் ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறேன். தமிழை திரையில் தொட்டு பணம் எடுக்க ஏன் தயக்கம் என்று?
ஆங்கிலம் சரியாக தெரியாதவர்கள் வேறுவழி இல்லாமல் தமிழைத் தொட்டுதான் பணம் எடுக்கவேண்டும். தமிழில் வலைப்பூ எழுதும் நானே ஆங்கிலத்தை பயன்படுத்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறார்களே என்று மனவேதனைப்பட்டேன்.
பிறகு பழக்கவழக்கத்தில் சிலமுறை ஆங்கிலத்தை தொட்டுவிட்டாலும், இப்போது அதிகபட்சம் தமிழை மட்டுமே திரையில் தொட்டு பணம் எடுக்கிறேன்.
ஆரம்பத்திலேயே தமிழ் ஏ.டி.எம்மில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே. யாரோ போராடி தமிழை ஏ.டி.எம்மிற்கு கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி போராடி வந்திருக்கக்கூடிய தமிழை உதாசீனப்படுத்துவது நமக்கு அழகா?
ஏ.டி.எம்மில் ஆங்கிலம் மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஏ.டி.எம்மில் தமிழ் இருக்குமாம். ஆனால் பயன்படுத்த மாட்டார்களாம்.
இப்போது இருக்கும் தமிழைக்கூட யாரும் பயன்படுத்தவில்லை என்று ஏ.டி.எம்மில் இருந்து தமிழை எடுத்துவிட்டால், என்ன செய்வார்கள்? அப்போதுதான் மானமே போச்சுன்னு பதிவுமேல் பதிவு எழுதி குவித்து தமிலிஷில் நூறு ஓட்டு வாங்கி, தவறு நம்மேல் இருக்க, யார்யாரையோ காறித்துப்பி "கடமை"யை செய்த திருப்தி அடைவார்களா?
கடந்த 50 வருடங்களாக தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. டெலிபோன், செல்போன், மொபைல், டிவி, வீடியோ, டிஷ் டிவி, கம்ப்யூட்டர், ஐபோட், கரண்ட், பஸ், டிக்கட், எஸ்.எம்.எஸ் இப்படி பல ஆங்கில வார்த்தைகள் நமது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவது தமிழனுக்கு சாதாரணமாக போய்விட்டது.
சுமார் 5000 வருடங்களாக தழைத்து வளர்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மொழிக்கு வேறெந்த காலகட்டத்திலும் இவ்வாறு கடுமையான சோதனை வந்ததில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் புதிய தொழில்நுட்பத்தில் உருவானவையாக இருப்பதால், அதற்கு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல்/ உருவாக்காமல் நேரடியாகவே அந்த ஆங்கில சொற்களை பயன்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்து வருகிறோம்.
நாம் இப்போது பிறமொழி சொற்களை கலந்துபேசி தமிழை வேகமாகவே அழித்துக்கொண்டு இருப்பதுபோல், இதுவரை வாழ்ந்த எந்த தலைமுறை தமிழர்களும் செய்திருக்கமுடியாது.
இப்போதே தமிழுக்கு இந்த நிலைமை என்றால் அடுத்தடுத்த தலைமுறையில் தமிழை எப்படி பேசப்போகிறார்கள் என்று நினைத்தாலே உயிர் போகிறது.
பத்து மாதம் சுமந்த தாயை மறக்கக்கூடாது. பத்து வருடம் படித்த பள்ளியை மறக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
தாய் தந்தை மட்டும் இல்லை. நம் பாட்டன், முப்பாட்டன் என்று ஐயாயிரம் வருடங்களாக நமது முன்னோர்களின் நல்லது, கெட்டது, மகிழ்ச்சி, கோபம், ஆசை, பாசம், காதல், காமம் இப்படி அனைத்து உணர்ச்சிகளுக்கும் மொழி வடிவம் கொடுத்து பாராட்டி சீராட்டி வந்த தாய்மொழி தமிழை நன்றி கெட்டு இப்படி மொழிக்கொலை செய்கிறோமே என்று நம்மில் ஒருவராவது, ஒரு கணமாவது மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தலைகுனிந்து இருக்கிறோமா? தாய்மொழிக்கு துரோகம் செய்பவனை மனிதனாக நினைக்கமுடியுமா?
யாரோ ஒருவர் பொது இடத்தில் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்று முயற்சி செய்தால்கூட, அந்த முயற்சியை கிண்டல் செய்யும் கூட்டம் ஒன்று எங்கிருந்தோ கூடிவிடும். இதில் என்ன கேவலம் என்றால் அவர்கள் அனைவருக்கு தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும். தயவு செய்து அந்த தாய்மொழி துரோக கூட்டத்தில் சேர்ந்துவிடாதீர்கள். அவர்களுக்கு சுத்தத் தமிழிலேயே கண்டனம் செய்யுங்கள்.
ஆங்கிலத்தை கலந்துபேசி தமிழை அழிக்க ஆரம்பித்தது இந்த தலைமுறைதான் என்ற அவப்பெயர் நமக்கு தேவையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment