இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், கிராமங்களில் வாழும் மக்கள், வணிகபெருமக்கள், இதுவரை கம்ப்யூட்டரை முறையாக கற்க வசதி/நேரம் இல்லாமல் இருப்பவர்கள், இப்படி சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், தொடந்து நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களால் கணினியையும், இணையத்தையும் பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.
உதாரணம் : ஆன்லைன் வங்கி செயல்பாடு/பணபரிமாற்றம், ஆன்லைன் பங்கு வணிகம், ஆன்லைன் ரயில்/விமான முன்பதிவு, ஆன்லைன் தேர்வுகள். இப்படி நிறைய உள்ளன.
கணினிகள் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், ஒரு சாதாரண மனிதன் (Lay person) அதை புரிந்துகொண்டு முழுமையாக பயன்படுத்துவதும், வைரஸ்கள் , உளவு மென்பொருட்களின் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சீராக பராமரிப்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.
கணினி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தாலும், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ குறைந்த அளவே தெரிந்துகொள்ள முடிகிறது.
இப்படிப்பட்டவர்கள், நிறைய விஷயங்களை அனுபவத்தில்தான் கற்றுக் கொள்கிறார்கள். “என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், வைரஸ் வந்து கோப்புகளை அழித்துவிட்டது” என்று வருத்தப்படுபவர்களை நாம் தினமும் பார்க்கிறோம். விவரம் தெரியாத/ முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு இணையம் அபாயகரமானதாக கூட மாறிவிடுகிறது. குலுக்கலில் பரிசு கிடைத்ததாக வரும் மின்னஞ்சலை அப்பாவித்தனமாக நம்பி, அதற்கு முன்பணம் அனுப்பி பரிசுத்தொகையை பெறும் முயற்சியில் பணநட்டம் அடைபவர்கள் பலர்.
அதிலும் ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருப்பவர்களின் நிலைமை மேலும் கடினம்தான். ஏனென்றால் கணினி/இணையம் சம்பந்தமான அதிகபட்ச செய்திகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதனால் நிறைய தேவையான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.
தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் (blogs) இப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளன. மேலும் இளைய தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கும் சிறந்த அறிவுச்சுரங்கமாக இவை திகழ்கின்றன.
எந்தப் பாடத்தையும் தாய் மொழியில் படித்தால் சிறந்த முறையில் அதை கற்றுக்கொள்ளமுடியும் என்பது அறிஞர்களின் கருத்து.
தமிழ் மொழி மேல் பற்று கொண்ட தன்னார்வலர்கள் தொழில்நுட்பத்தையும் தமிழிலேயே கொடுத்தால் தமிழர் பயனடைவார்கள் என்று பிளாக்கர்.காம் (http://www.blogger.com/), வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/) போன்ற இலவச சேவைகளை பயன்படுத்தி வலைப்பூக்களை ஆரம்பித்து, தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். சில வலைப்பூக்கள் கணினி திரையை ஓடும் படமாக (வீடியோ) பதிவு செய்து வெளியிட்டு சிறப்பாக பணியாற்றுகின்றன.
வலைப்பூக்களின் வாசகர்களே எதிர்காலத்தில் தாங்களும் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து தமிழுக்கு தொண்டாற்ற வாய்ப்பு உள்ளது.
தமிழ் விக்கிபீடியாவும் இப்படிப்பட்ட மக்களுக்கு உதவுவதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் விக்கிபீடியாவில் இருக்கும் கட்டுரைகளை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்வது அல்லது தங்கள் ஐயத்தை தீர்த்துக்கொள்ள எழுதியவரை தொடர்புகொள்வது போன்ற செயல்கள் எளிதல்ல . ஆனால், தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்களில் அந்த வசதி உள்ளது. பொதுவாக ஓரிரு நாளில் பதில் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது.
அவ்வப்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் வலைப்பூக்கள் வழியாக தமிழிலேயே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். சில தமிழ் நாளிதழ்களில் வாரம் ஒருமுறைதான் கணினி கட்டுரைகள் அல்லது கணினி மலர்கள் வருகின்றன. அதனால் கணினி/இணைய உலகத்தில் நிகழும் பல நிகழ்வுகளை பிரசுரிக்க/அறிய முடியாமல் போகிறது.
மேலும் http://wiki.pkp.in/forum:start போன்ற விவாத மேடைகளில் வாசகர்கள் தங்கள் சந்தேகங்களை தமிழிலேயே கேட்டு, தமிழிலேயே விடைகளை அறிந்துகொள்ளலாம். கணினி வாங்குதல் அல்லது அதன் பயன்படுத்துவதில் சிக்கல் போன்ற நடைமுறை பிரச்சனைகளுக்கு இத்தகைய விவாத மேடைகளில் பதில் கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து தாங்களும் பங்கு பெறலாம்.
இத்தகைய வலைப்பூக்களின் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிலிஷ் (http://www.tamilish.com/), தமிழ்மணம் (http://www.tamilmanam.net/) போன்ற திரட்டிகளுக்கு பெரும்பங்கு உண்டு.
தற்போது தொழில்நுட்பம் மட்டுமே எழுதும் தமிழ் வலைப்பூக்கள் ஏறக்குறைய 40 உள்ளன. அலெக்ஸா.காம் (Alexa.com) தரவரிசைப்படி தொழில்நுட்ப வலைப்பூக்களின் தரவரிசை, தமிழ் சமூகத்தின் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் சுதந்திர இலவச மென்பொருள் (http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/) வலைப்பூவில் கடந்த ஒரு வருடமாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. மேலும் பலர் தொழில்நுட்ப பதிவுகளை மற்ற செய்திகளுடன் சேர்த்து எழுதுகிறார்கள். அந்த வலைப்பூக்களின் முகவரிகளும் இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வலைப்பூக்களைப் பற்றிய விழிப்புணர்வு, கணினிகளை பயன்படுத்தும் மக்களிடம் குறைவாகவே உள்ளது. மேலும் நாளிதழ், மாத இதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்களைப் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த நிலை மாறி ஊடகங்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி ஆதரவு தந்தால் பொதுமக்கள் மேலும் பயனடைய முடியும். இந்த சேவை பற்றி தெரிய வரும் பலர், 'முன்பே தெரியாமல் போய்விட்டதே' என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) திட்டம், வலைப்பூக்களுக்கு விளம்பரம் கொடுத்து அவர்கள் வருமானத்திற்கு உதவுகிறது. ஆனால் தமிழ் மொழி மட்டுமல்ல. இந்தியாவின் எந்த மொழியில் வலைப்பூ இருந்தாலும் (இந்தி உட்பட), கூகிள் ஆட்சென்ஸ் அதற்கு விளம்பரம் கொடுப்பது இல்லை. அவ்வாறு கூகிள், தமிழுக்கு விளம்பரம் தந்தால், அனைத்து வகை தமிழ்மொழி வலைப்பூக்களும் மேலும் சிறப்பான முறையில் தாய்மொழிக்கு சேவை செய்ய முடியும்.
சில குறிப்பிடத்தக்க தமிழ்மொழி தொழில்நுட்ப வலைப்பூக்கள்
http://pkp.blogspot.com/
http://cybersimman.wordpress.com/
http://tvs50.blogspot.com/
http://suryakannan.blogspot.com/
http://www.pudhuvai.com/
http://winmani.wordpress.com/
http://velang.blogspot.com/
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் http://www.infitt.org/ வெளியிடும் மின்மஞ்சரி மின்னிதழ், இவ்வாண்டு ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010 சிறப்பு மலராக வந்துள்ளது. இதில் கணினி தொடர்பான 40 கட்டுரைகள் உள்ளன.
அதில் ஒன்றாக எனது மேற்கண்ட கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
மின்னிதழின் சுட்டி PDF கோப்பாக இங்கு (4.7 MB)
மேற்கண்ட என் கட்டுரையை மட்டும் PDF கோப்பாக பெற சுட்டி இங்கு (100 KB)
No comments:
Post a Comment