Sunday, October 3, 2010

தமிழில் பேசும் கணினி

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்வதில் ஆரம்பித்த் அவர் சில வாரங்களில் இணையதளங்களைப் 'பார்வை'யிட்டு அவற்றிற்கு தனது எதிர்வினையை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பவராகவும் ஆகிவிட்டார்.

இனி கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

நான் இதில் மூன்றுவித பிரதிகளை இட்டு சோதனை செய்து பார்த்தேன்:

1. பாரதியின் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற கவிதை
2. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் சிறுகதையின் ஒரு பகுதி (நாடகத் தமிழும், நெல்லைத் தமிழும் விரவி வரும் ஒரு நடை)
3.ஜெர்மனியில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாடு பற்றி நான் எழுதிய செய்திக் குறிப்பு
இந்தப் பொறி நன்றாகவே வேலை செய்கிறது. நீங்களும் சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கருத்தை ramkiag@ee.iisc.ernet.in என்ற மின்னஞ்சல் மூலம் பேராசிரியருக்குத் தெரிவிக்கலாம்.


நன்றாக வேலை செய்கிறது எனினும் சிற்சில மேம்படுத்தல்கள் தேவை.

ஆங்கிலம் கலந்து எழுதினால் ஆங்கிலப் பகுதிக்ளை அது வாசிப்பதில்லை. எண்களில் அதற்குப் பிரசினைகள் இருக்கிறது.

பேராசிரியர் ஏ.ஜி.ஆர். கணினி/இணையத்தில் தமிழைச் செழுமைப்படுத்த உழைத்து வருபவர்களில் ஒருவர். உத்தமத்தின் தமிழிணைய மாநாடுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்.

இது அவர் தமிழுக்கு அளித்துள்ள மிகப் பெரிய கொடை.

விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம்.

No comments:

Post a Comment